திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). மனைவி ஆஷா(40) ஆகியோர் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் புதூர் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த போது காரின் முன் பக்கத்தில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கிய உடன் காரின் முன் பக்கத்திலிருந்து தீ மளமளவென பற்றி எரிந்தது.
இதில் அதிர்ந்து போன கணவன் மனைவி இருவரும் உடனடியாக கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.