தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண்

மறைமலைநகரில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

திருச்சி,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கண்ணதாசன்நகரை சேர்ந்தவர் திருமாறன் (வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் ஒரகடம், மறைமலைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்காக ஆட்களை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு திருமாறன் ஒரகடத்தில் இருந்து காரில் சென்று கொண்டு இருந்தபோது, திருக்கச்சூர் என்ற இடத்தில் 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயன்றனர்.

அப்போது அவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதில் அந்த கும்பல் வெடிகுண்டு வீசாமல் தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு, திருமாறனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 24-ந் தேதி திருமணநாளையொட்டி திருமாறன், தனது மனைவியுடன் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்.

வெடிகுண்டு வீசி கொலை

அப்போது கோவில் வளாகத்துக்குள் சாமி கும்பிடுவதுபோல் நின்ற 19 வயது வாலிபர், திருமாறன் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பாதுகாப்பு போலீஸ்காரர் எழிலரசன், குண்டு வீசிய திருவள்ளூர் ஆத்தூரை சேர்ந்த சுரேஷை துப்பாக்கியால் சுட்டார். இதில் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

மேலும், இந்த வெடிகுண்டு தாக்குதலில் திருமாறனின் கார் டிரைவர் மற்றும் பெண் பக்தர் ஒருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தனியார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில்போட்டி காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.

திருச்சி கோர்ட்டில் சரண்

கொலையாளிகளை கைது செய்ய 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மறைமலைநகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 48) என்பவர் திருச்சி 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பின்னர் அவரை வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு