தமிழக செய்திகள்

இலங்கையில் இருந்து படகில் தப்பி 2 குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெண்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து படகில் 2 குழந்தைகளுடன் தப்பி இளம்பெண் தனுஷ்கோடி வந்தார். வாழ வழியின்றி தவிக்கும் எனக்கு உதவுங்கள் என உருக்கமுடன் அவர் கோரிக்கை விடுத்தார்.

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக அவ்வப்போது மக்கள் தப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து படகு ஒன்றில் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தப்பி நேற்று அதிகாலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறங்கினார். அவரை இலங்கையில் இருந்து படகில் அழைத்து வந்தவர்கள், தனுஷ்கோடியில் இருந்து நடுக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கணவரை பிரிந்தவர்

இது குறித்து தகவல் கிடைத்ததும் கடலோர போலீசார் தனுஷ்கோடி சென்று 2 குழந்தைகளையும், அந்த பெண்ணையும், மண்டபத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் திமிலை தீவு பகுதியை சேர்ந்த வர்ஷினி (வயது 35) என்பதும், மகள் நைனிகா (11), மகன் ரங்கிசன் (4) என்பதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வர்ஷினி, தனது குழந்தைகளுடன் பாட்டி மற்றும் தங்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், திமிலை தீவு பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்து, வருமானம் இன்றி தவித்த என்னால் குழந்தைகளுடன் அங்கு வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் இந்தியாவுக்கு படகில் தப்பி வந்ததாக வர்ஷினி கூறினார்.

உருக்கமுடன் வேண்டுகோள்

மேலும் அங்கு ஒரு கிலோ அரிசி ரூ.350, சீனி ரூ.300, பிஸ்கட் பாக்கெட் ரூ.200, காய்கறி கிலோ ரூ.300 என பல மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதனால்தான் தனுஷ்கோடிக்கு எப்படியாவது வந்து இறங்கிவிட வேண்டும் என்று திமிலை தீவு பகுதியில் இருந்து மன்னார் பகுதிக்கு வந்தேன்.

அங்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் வீட்டில் 3 நாட்கள் தங்கினேன். என்னிடம் இருந்த 2 பவுன் தங்க நகையை விற்று அதில் கிடைத்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன்னார் பகுதியில் உள்ள ஏஜென்ட் ஒருவரிடம் கொடுத்து பிளாஸ்டிக் படகு ஒன்றில் குழந்தைகளுடன் இரவோடு இரவாக புறப்பட்டு தனுஷ்கோடிக்கு காலையில் வந்தோம். இரவில் பிள்ளைகளுடன் கடல் கடந்து படகில் வந்ததை நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. வாழ வழியின்றி தவிக்கும் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் இங்குள்ள அரசும், அதிகாரிகளும் உதவ வேண்டும் என்று உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

விசாரணைக்கு பின்னர் 2 குழந்தைகளையும், வர்ஷினியையும் மண்டபம் அகதிகள் முகாமில் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்