சென்னை,
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக சமீபத்தில் கூறினார். இதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் தொடர்ந்து தமிழக அரசு மீது அவதூறாக பேசினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என சில அமைச்சர்கள் கூறினர்.
அமைச்சர்களின் பேச்சுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் அறிக்கை, பேட்டி அளித்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று இரவு டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டார். அதில், அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான் என குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு தகவலில், இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை என கவிதை நடையில் எழுதியுள்ள அவர் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்றும் கூறியுள்ளார்.இதனால் கமல்ஹாசன் அரசியலில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
கமல்ஹாசனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-
*இந்தி திணிப்புக்கு எதிராக என்றைக்கு குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியல்வாதி தான்.
*ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறு, அரசியலுக்கு வா எனக் சொல்பவர்கள், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்
* ஊழல் குறித்த ஆதாரங்களை இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
*டிஜிட்டல் யுகம் என்பதால் ஊழல் குறித்த ஆதாரங்களை டிஜிட்டலாக பதிவு செய்யவேண்டும்.
*ஊழல் குறித்த விவரங்களை www.tn.gov.in.ministerslist-இல் அனுப்பலாம்.
*ஊழல் குறித்த இணையதளத்தில் மக்களே குரல் கொடுக்க வேண்டும்.
*எல்லா துறைகளுக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள், என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
*கேள்வி கேட்பவர்களை கைது செய்யும் அளவுக்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை.
*துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.
*ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் மறந்திருந்தால் நினைவு படுத்த மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு கூறினார்.