தமிழக செய்திகள்

போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையர் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 223 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் சிக்கியது.

திருச்சி,

அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையர் முருகானந்தத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 223 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் சிக்கியது.

சென்னை எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூர். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். முருகானந்தம் சென்னையில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.

திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 8 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் உள்ளே சென்று கதவுகளை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டனர். இதனை கண்ட முருகானந்தத்தின் மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவர்களை வெளியேவிடவில்லை.

அவர்களிடம் நாங்கள் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்து வந்திருக்கும் போலீசார், உங்களது வீட்டில் சோதனை செய்ய உள்ளோம் என்றனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் உள்ள பீரோக்கள் உள்ளிட்டவையில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டுமனை பத்திரங்கள், முருகானந்தம் வங்கி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், அதன் அடிப்படையில் முருகானந்தம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து 11 மணி நேரம் நடந்தது. சோதனையை முடித்துக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களது கையில் ஏராளமான ஆவணங்கள் இருந்தன.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

முருகானந்தம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன இதுதொடர்பாக முருகானந்தம் மீது நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் உள்ள அவரது வீட்டில் நாங்கள் சோதனை மேற்கொண்டோம்.

இதேபோல் நேற்று ஒரே நாளில் அரவக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிலும், கோவையில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கேயும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சோதனை மேற்கொண்ட போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 223 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள், வீட்டுமனை பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவை சிக்கி உள்ளன.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம். முருகானந்தத்திடமும் இதுகுறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என போலீசார் கூறினர்.

அரசு போக்குவரத்து துறையில் இணை ஆணையராக பணிபுரிந்துவந்த முருகானந்தம் சில நாட்களுக்கு முன்பு தான் கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு