சென்னை,
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளரும் நேற்று முன்தினமே அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி அறிவிக்கப்படாமல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்த ஆட்சிமன்ற குழு கூட்டம் மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்ற குழுவினர் அ.தி. மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தினர். அப்போது, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் உடன் இருந்தார்.
ஆட்சிமன்ற குழுவினர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் தனித்தனியே நேர்காணல் நடத்தினர். நேற்று மாலை 4.20 மணி முதல் மாலை 5.50 மணி வரை நடைபெற்ற இந்த நேர்காணலில் விருப்பமனு தாக்கல் செய்திருந்த 52 பேரில் 45 பேர் கலந்து கொண்டனர். 7 பேர் தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை என்று கடிதம் வழங்கி உள்ளனர்.
நேர்காணல் முடிந்து வெளியே வந்த துணை முதல்-அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, இன்று நடைபெற்ற நேர்காணலில் 45 பேர் கலந்து கொண்டனர். 7 பேர் தவிர்க்கமுடியாத காரணத்தால் வர இயலவில்லை என்றும், கட்சி யாரை வேட்பாளராக அறிவித்தாலும் எங்களுக்கு முழு மகிழ்ச்சி என்றும் கடிதம் கொடுத்து உள்ளனர். ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் முறைப்படி அறிவிக்கப்படுவார். தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அ.தி.மு.க. அதை சந்தித்து மகத்தான வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்கிறது என்றார்.
அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 10-ந் தேதி வரை காலஅவகாசம் இருக்கிறது. உரிய நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுக்கு எந்தவித அச்சமும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போதே ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது, தி.மு.க. தான் வெற்றிபெறும் என்று அந்த கட்சியின் தலைவர்கள் கூறினார்கள். பத்திரிகைகளில் கூட ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் தேர்தல் முடிவுகள் வரும் என்று எழுதினார்கள்.
ஆனால் ஜெயலலிதா மிகவும் தெளிவாக, ஏற்காடு இடைத்தேர்தல், அதற்கு அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிவாய்ப்பு பெறுவதற்கு முன்னோடி தேர்தலாக அமையும் என்று கூறினார். அதே போன்று, ஏற்காடு இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் மாபெரும் செல்வாக்கால், அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் 78 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
அதற்கு அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தோம். அப்படிப்பட்ட அ.தி.மு.க. இயக்கம் என்றைக்குமே பின்வாங்காது. இன்னும் ஓரிரு தினங்களில் அ.தி.மு.க. வேட்பாளரை அறிவிப்போம். நிச்சயமாக வெற்றிபெறுவோம். இந்த வெற்றி அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரித்திரத்தை படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வமே நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரான கலியபெருமாளின் மனைவி மலர்விழியை திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மா.ஆண்டியப்பன் எழுதிய தமிழக அரசியலில் அ.இ. அ.தி.மு.க. என்ற புத்தகத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.