தமிழக செய்திகள்

கனமழையால் பாதிப்பு: மக்களின் கண்ணீரை துடைக்கும் பணிகளில் அ.தி.மு.க.வினர் ஈடுபடவேண்டும்

கனமழையால் பாதிக்கப்பட்டு தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் கண்ணீரை துடைக்கும் பணிகளில் அ.தி.மு.க.வினர் ஈடுபடவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முற்றிலும் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. பருவமழையின் தொடக்கத்திலேயே தலைநகர் சென்னை மட்டுமின்றி, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகாலமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்து, அன்றாட வாழ்வே சுமையாகிப்போன மக்கள், இந்த பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கண்ணீர் கடலில் மூழ்கி இருப்பதை பார்க்கையில் நெஞ்சம் பதறுகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி என்றால் இந்த மக்களுக்காக எப்படியெல்லாம் ஓடோடி உழைத்திருப்பார், உள்ளதையெல்லாம் அள்ளிக் கொடுத்திருப்பார் என்று உள்ளம் ஏங்குகிறது. ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்காமல், அ.தி.மு.க.வினர் உடனடியாக களத்தில் இறங்கி மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

பசிப்பிணி போக்கிய பயிற்சி

மக்கள் தொண்டாற்றுவதில் மற்றவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் ஓடி ஓடி உழைப்போம், ஊருக்கெல்லாம் கொடுப்போம். நம்மிடம் வசதி வாய்ப்புகள் குறைவென்றாலும் இருப்பதைப் பகிர்வோம். இதற்குமுன் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம், சுனாமி, புயல், கொரோனா பேரிடர் போன்ற காலகட்டங்களில் ஆங்காங்கே கட்சியினரே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அம்மா உணவகங்கள், சமூக உணவுக்கூடங்கள் வழியாக பசிப்பிணி போக்கிய பயிற்சி நமக்கு இருக்கிறது.

முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்

அ.தி.மு.க.வின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், கட்சியினரும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, பால், உடை, மருத்துவ வசதி, மருந்து-மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு உழைப்பதில் அ.தி.மு.க.வினரே முன்கள வீரர்கள், தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு நம் பொதுவாழ்வுக்கு உண்டு. பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம், வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம் என்ற எம்.ஜி.ஆரின் பாடல் நம் பணிகளுக்கு இலக்கணமாகட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்