தமிழக செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியாகிறது

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) வெளியாகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இதை வெளியிடுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் 1995-1996-ம் ஆண்டு கால இறுதியில் நிதி நிலைமை நன்றாக இருந்தது. அப்போது, அரசிடம் ரூ.649 கோடி நிதி ரொக்கமாக இருப்பு இருந்தது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நிதி நிலைமை மோசமடைய தொடங்கியது.

2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அதே ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டது.

கடன் அளவு அதிகரிப்பு

2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. அடுத்து, 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது.

2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்த நிலையில், 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டை அ.தி.மு.க. தாக்கல் செய்தபோது, தமிழகத்தின் கடன் அளவு ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.

13 மடங்கு உயர்வு

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. மடங்கில் கணக்கிடும்போது 13 மடங்கு உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பால் அரசுக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, கடன் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தி.மு.க. கடும் அதிர்ச்சி

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., முதலில் அரசின் நிதி நிலையை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தது. அப்போதே, விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கவர்னர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) வெளியாக இருக்கிறது.

வெள்ளை அறிக்கை வெளியீடு

20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட இருக்கிறது.

இன்று காலை 11.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். அப்போதுதான், தமிழ்நாட்டின் கடன் சுமை எவ்வளவு என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவரும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்