சிப்பாய் புரட்சி நினைவு தூண்
75-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் கே.அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று வேலூருக்கு வந்தார். முதற்கட்டமாக வேலூர் ரங்காபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த 75 அடி உயரமுள்ள கம்பத்தில் அண்ணாமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிப்பாய் புரட்சியின் நினைவாக மக்கான் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அனைத்து திட்டமும் சிறப்பானவை
பின்னர் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்துக்கு கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் சிறப்பான திட்டம். டிபன்ஸ் காரிடார் (ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆலை) நிகழ்ச்சிக்காக தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது கருப்பு கொடி காட்டி கோபேக்' மோடி என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று அதனை நல்ல திட்டம் என்றும், ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
குழப்பம் மட்டும் அதிகமாக உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி. அதனால் தான் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி வெங்கையநாயுடுவை அழ வைத்து விட்டார்கள். 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் முழுமையடைய போகிறது என்று கூறினார்.
இதில், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சி.விஜயன், செயலாளர் என்.அமுதபாண்டியன், பார்வையாளர் எம்.கே.ரவிசந்திரன், பொதுச்செயலாளர்கள் ஆனந்தன், கண்ணன், வக்கீல் இந்தியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.