சென்னை,
பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் 2021-ம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதிவரை ஆன்லைனில் நடந்தது.
அவ்வாறு ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்காத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட இருப்பதாகவும் அவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என்றும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்கள் அச்சப்படத் தேவை இல்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மேலும் அவர், தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட், அவர்கள் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என்ற தகவல் தவறானது. மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் தேர்வில் தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.