உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில அ.தி.மு.க. சார்பில் நேற்று நடந்த மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இன்றையதினம் (நேற்று) மு.க.ஸ்டாலின் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் ஒவ்வொரு மாவட்டமாக போய் மக்களை சந்திக்கின்றபோது ஒரு புகார் பெட்டியை வைத்து அதில் மக்கள் தங்கள் புகாரை எழுதி பெட்டியில் போடவேண்டும் என்று சொல்கிறார். அதற்கு அவசியமில்லை. ஏன் என்று சொன்னால், அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சட்டமன்றத்திலே நானே அறிவித்தேன்.
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் 9,27,638 மனுக்களை நாங்கள் பெற்றோம். அதிலே 5,22,812 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. அந்த மனுக்கள் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. நிராகரிக்கப்பட்ட மனுக்கள், என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டன என்ற செய்தியும் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
நான் ஏற்கனவே ஒரு திட்டத்தை கொண்டு வரலாம் என்று எண்ணி அதை தொடங்கி நடைபெறுகின்ற வேளையிலே தான் இந்த புகார் பெட்டி வைக்கின்ற திட்டம் மு.க. ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது. முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் ஒன்றை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 15-9-2020 அன்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கின்றேன்.
மனுதாரர் வட்ட அலுவலகத்திற்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கோ தங்கள் வீட்டில் இருந்தபடியே கைபேசி, தொலைபேசி மூலமாகவோ, இணைதளம் வாயிலாகவோ, தபால் மூலமாகவோ, சமூக ஊடகத்தின் மூலமாகவோ தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம். இத்திட்டம் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த 22-9-2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இம்மனுக்களை பெற்று பரிசீலனை செய்வதற்கு ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தற்போது அதன் செயலாக்கம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை நான் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கிவைக்க உள்ளேன்.
மக்கள் கோரிக்கைகளை குறைகளை பல்வேறு சிறப்பு திட்டங்களின் மூலமாக உடனுக்குடன் நிறைவேற்றி தீர்த்துவைக்கின்ற அரசு. நான் ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவித்து அந்த அறிவிப்பிற்கிணங்க 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது மென்பொருள் தன்மை பரிசோதனை நடைபெற்று வரும் இந்த தருணத்தில், தாங்கள் தான் புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்தது போல் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது விந்தையிலும் விந்தை. இத்திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கின்ற விஷயம் எப்படியோ கசிந்து போய் தான் ஸ்டாலின் அவர்கள் புகார் பெட்டியை வைக்க வந்திருக்கின்றார். இவ்வாறு அவர் பேசினார்.