தமிழக செய்திகள்

அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் ஐகோர்ட்டில், விசாரணை ஆணையம் பதில் மனு

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தடுப்பதற்காகவே அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

அதில், ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சூழல், வழங்கப்பட்ட சிகிச்சைகள், மரணத்துக்கு காரணம் ஆகியவை குறித்து விசாரிக்கத்தான் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா? போதுமானதா? என்ற மாறுபட்ட கோணத்தில் விசாரணை நடத்துகிறார். இப்படி விசாரணை நடத்த அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணை யத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட்டு, இதற்கு பதில் அளிக்கும்படி நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளர் எஸ்.கோமளா பதில் மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கடந்த 2017-ம் ஆண்டு நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆணையத்தின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அரசுக்கு உண்மை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளது. அப்பல்லோ ஆஸ்பத்திரி எங்களிடம் அளித்த பட்டியலில் இருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது.

வி.கே.சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்தபோதும் நியாயமான வாய்ப்புகள் அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்புக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் மட்டுமின்றி அவருக்கு கடைசி நிமிடம் வரை அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்தவும் ஆணையத்துக்கு முழுஅதிகாரம் உள்ளது.

தற்போது நடந்து வரும் இந்த விசாரணையை தடுக்கும் நோக்கத்துடனேயே அப்பல்லோ ஆஸ்பத்திரி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. ஆணையத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் பகிரங்கமாக மறுக்கிறோம்.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி முதல் மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி வரை அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டியது ஆணையத்தின் கடமை.

இந்த ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுக் களை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்துவிட்டது என்பதால் இந்த மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு