தமிழக செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது

பணம் எடுத்து தருவதாக கூறி திருமங்கலம் ஏ.டி.எம்.மையத்தில் நூதனமுறையில் பணம் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.83 ஆயிரம், 63 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்தீஸ்வரி (வயது 32). கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி இவர் திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது இவர் பின்னால் நின்ற மர்ம நபர் முத்தீஸ்வரியிடம், தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் போட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை எனக் கூறி அதேபோல் தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீஸ்வரியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி கொண்டு அவர் அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் முத்தீஸ்வரி கார்டை பயன்படுத்தி அந்த நபர் ரூ.30 ஆயிரத்தை ஏ.டி.எம்.மில் இருந்து எடுத்துள்ளார்.

இதுகுறித்து முத்தீஸ்வரியின் செல்போனுக்கு பணம் எடுத்ததாக தகவல் வரவே அவர் பதறிப்போய் வங்கியில் விசாரித்தார். அப்போது அவரது கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரிய வந்தது. உடனே போலீசாரிடம் புகார் செய்தார்.

இதேபோல் திருமங்கலத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (52) என்பவரிடம் ரூ.35 ஆயிரம், கண்டுகுளத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரிடம் ரூ.35 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக அதே மர்ம நபர் எடுத்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா

இதனையடுத்து வங்கி ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை பெரியார் பஸ் நிலயம் அருகே அறை எடுத்து தங்கிய நபர், திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம். மையங்களை பணத்தை எடுக்க வரும் கிராமத்து மக்களிடம் பணத்தை எடுத்து தருவது போல் வேறு ஒரு கார்டை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.

அவரை தனிப்படையினர் நேற்று திருமங்கலம் ஏ.டி.எம். மையத்தின் அருகே பிடித்து டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லையை சேர்ந்தவர்

போலீசார் விசாரணை நடத்திய போது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பக்ருதீன்(47) என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது ஏ.டி.எம் மையத்தில் பணம் திருடுவது குறிக்கோளாக வைத்திருப்பதாகவும், இதுவரையில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ரொக்கப்பணம் ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பாலீசார் விசாரித்து வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்