ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜனகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 64). இவரது மகள் சென்னையில் இருக்கிறார். மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிக்கொண்டு சுப்பிரமணி, தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அடுத்த நாள் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி சென்னையில் இருந்து ஜனகாபுரம் கிராமத்திற்கு வந்து வீட்டை பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.
அதில் வைத்திருந்த 14 பவுன் நகை மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், இரண்டு சிலிண்டர்கள், ஒரு டி.வி. மற்றும் ரூ.20 ஆயிரம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.