தமிழக செய்திகள்

ஆவடி போக்குவரத்து போலீஸ் நிலையம் முன் கார் டிரைவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆவடி போக்குவரத்து போலீஸ் நிலையம் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கார் டிரைவர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

மாங்காடு லீலாவதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38). கார் டிரைவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கிரேன் மீது கார் மோதியது.

இதில் காரும், கிரேனும் சேதம் அடைந்தது. இது குறித்து கிரேன் ஆபரேட்டர் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த நிலையில் தான் அளிக்கும் புகாரின்பேரில் கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், தனக்கு அந்த முதல் தகவல் அறிக்கை நகலை வழங்க வேண்டும் எனவும் ஆவடி போக்குவரத்து போலீசாரிடம் கேட்டதற்கு, போலீசார் லஞ்சம் கேட்பதாக மோகன்ராஜ் குற்றம் சாட்டினார்.

பிச்சை எடுக்கும் போராட்டம்

இதை கண்டித்து மோகன்ராஜ் சக டிரைவர்களுடன் சேர்ந்து உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் 60-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசாரை கண்டித்து பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் உள்ள ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையம் முன்பு நேற்று கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தட்டை ஏந்தியபடி அங்குள்ள கடைகளுக்கு சென்று பிச்சை எடுத்து, அதில் கிடைத்த பணத்தை ஆவடி போக்குவரத்து போலீசாரிடம் கொடுக்க முயன்றனர்.

60 பேர் கைது

இதையடுத்து பூந்தமல்லி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் 60-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கூறும்போது, "விபத்து நடந்ததற்காக வழக்குப்பதிவு செய்து முடிவடைந்த நிலையில் தற்போது கார் டிரைவர் மோகன்ராஜ், தான் கொடுக்கும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். அவரிடம் லஞ்சம் எதுவும் கேட்கவில்லை" என்று மறுத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்