சென்னை,
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக்குழு அறிக்கையின் முதற்பாகத்திற்கு வரவேற்பு தெரிவித்த கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதற்பாகம் குறித்த தங்களது வரவேற்புக்கு நன்றி, சித்தராமையா அவர்களே.
எங்களது முன்னெடுப்புக்கான தங்களது அறிவார்ந்த ஆதரவையும், கூட்டாட்சிக் கருத்தியலைப் புதுப்பிக்கும் முயற்சி கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் எனத் தாங்கள் அங்கீகரித்திருப்பதையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.
“பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மை கொண்டு நிலைக்கச் செய்ய முடியாது, அரசியலமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதனைச் செய்ய இயலும்” எனத் தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது என ஆமோதிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.