சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கோடை வெயில் கொளுத்தி வந்தது. ஆனால், கடந்த இரு நாட்களாக, சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களில், குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இரண்டு நாட்களாக பரவலாக வானம் இருண்டு, பருவ மழை காலம் போன்று துறலும், சாரலுமாக மழை பொழிந்து வருகிறது.:வடக்கு கடலோர மாவட்டங்களில், திடீர் மழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணம். அதேநேரம் வங்கக்கடலில், புதுச்சேரியை மையமாக கொண்டு, வடக்கு மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு இடையே மேலடுக்கு சுழற்சி உள்ளது. இது, நிலப்பகுதியை ஒட்டி நிலவுவதால், மேகங்கள் திரண்டு நின்று, மிதமாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளுமாறு, தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.