தமிழக செய்திகள்

ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் சென்னை ஐகோர்ட்டு அறிவுரை

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் சமீபத்தில் 2 பேரை புலி கொன்றது. அந்த டி23 என்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நேற்று 10-வது நாளாக நடந்தது. அப்போது சிங்காரா வனப்பகுதியில் ஒரு புலி நடந்து செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு வனத்துறையினர் சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் மசினகுடி-மைசூரு சாலையில் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் ஒரு புலி நடந்து செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே சீனிவாஸ், உதயன் என்ற கும்கி யானைகள் மீது வனத்துறையினர் இருக்கைகள் அமைத்தனர். பின்னர் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் கால்நடை டாக்டர்கள் கும்கி யானைகள் மீது ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து புலி நடந்து சென்றதாக கூறப்பட்ட வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் டிரோன் மூலமும் தேடப்பட்டது.

இதற்கிடையில் முதுமலை மோப்பநாய் அதவை, கர்நாடக மோப்பநாய் ராணாவுடன் சத்தியமங்கலம் மோப்பநாய் டைகரும் வரவழைக்கப்பட்டு, புலியை தேடும் பணி நடந்தது. ஆனால் புலியை காண முடியாததால், ஏமாற்றம் அடைந்தனர். எனினும் முதலில் கிடைத்த தகவலின்படி மாலை 3 மணியளவில் சிங்காரா வனப்பகுதியில் புலி நடந்து செல்வதை வனத்துறையினர் கண்டனர்.

ஆனால் அது தேடப்படும் ஆட்கொல்லி புலியா? என்பதை கண்டுபிடிப்பதற்குள் புதர்களுக்கு இடையே சென்று மறைந்தது. பின்னர் அந்த இடத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து தேடியபோது புலி இல்லை. ஏதோ ஒரு வழியாக தப்பி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இவ்வாறு ஆட்கொல்லி புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.

இந்நிலையில், 11 நாள் தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியை வனத்துறையினர் தற்போது சுற்றி வளைத்துள்ளனர். மயக்க மருத்து கொடுத்து புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரியில் உலவும் டி23 புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை; புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்