தமிழக செய்திகள்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜலேந்திரன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்யும் நோக்கில் அல்-உம்மா இயக்கத்தினர் கோவையில் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 58 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற 20 பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கிலேயே அரசு இவ்வாறு அவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளது. எனவே, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிறையில் உள்ள 49 கைதிகளை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக விதிகளை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு விதிகளை வகுத்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பயங்கரவாத தடுப்பு சட்டங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே விடுதலையானவர்கள் தகுதியானவர்கள் கிடையாது என தெரியவந்தால், அதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்