தமிழக செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு பணி: டாக்டர்கள், நர்சுகள், போலீஸ்காரர்களுக்கு சம்பள உயர்வு - ஐகோர்ட்டு கருத்து

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோரது பணி மகத்தானது. அதனால் இவர்களது சம்பளத்தை அரசு உயர்த்தும் என்று நம்புவதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், உணவு கிடைக்காமல் தவித்து வருபவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கவேண்டும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களை காப்பாற்றும் உன்னத பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள், போலீஸ்காரர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போதுமான நோய் தடுப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் வழங்கவேண்டும். திருமண மண்டபங்களையும், கல்வி நிலையங்களையும் கொரோனா தடுப்பு வார்டுகளாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.பார்த்தசாரதி, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சேவை புரிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், டாக்டர் கள் தயாராக இருந்தும், அவர்களை தமிழக அரசு இதுவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை. பல இடங்களில் ஆதரவற்ற மக்கள் உணவு கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், தமிழக அரசிடம் போதுமான கொரோனா தடுப்பு தற்காப்பு கவசங்கள் இருப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 14 ஆயிரம் பரிசோதனை கருவிகள் உள்ளது. மேலும், கருவிகள் வரவுள்ளது. தன்னார்வலர்களை தமிழக அரசு சேவைப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது என்று கூறினார்.

இவற்றைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவுக்கு எதிரான நடைபெறும் போரில் முன்னணி போர்வீரர்களாக நிற்பவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்டோர்தான். எனவே, அவர்களுக்கு இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க போதிய உயிர்காக்கும் கவசங்களை வழங்கவேண்டும். தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது சேவை புரிந்து வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்டோருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவர்களது பணி மகத்தானது. 24 மணி நேரமும் பணியாற்றி வரும் இவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியம், போதுமானதாக இல்லை. எனவே இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊதிய உயர்வு அளிக்கும் என நம்புகிறோம். நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு