தமிழக செய்திகள்

இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுவதால் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தள்ளிவைக்க வேண்டும்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மத்திய சுகாதாரத்துறை மந்திரி, விரைவில் இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதியாகும் என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருந்துகொண்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் நமக்கே போதுமான அளவு தடுப்பூசி இல்லை.

தமிழகத்தில் கடந்த 12-ந் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இது இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 6 லட்சம் பேரில் இதுவரை 4 கோடியே 37 லட்சத்து 9 ஆயிரத்து 804 பேர்தான் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசிகள் ஏற்றுமதி

இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி. இதில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் 70 சதவீதம் பேர். அந்தவகையில் 97 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். 2-ம் தவணையும் சேர்ந்தால் 194 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். இதுவரை இந்தியாவில் 20 கோடி பேர் மட்டுமே 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். ஆக, இந்தியாவில் 3-ல் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடப்படுவதற்கு இன்னமும் 115 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும்.

இந்த நிலையில் 12 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதை உலகின் பல்வேறு நாடுகள் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதை நாம் பரிசீலிக்க வேண்டும். இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வோம் என்கிற முடிவு, எந்த வகையில் சரியாக இருக்குமென்று தெரியவில்லை. தமிழக மக்களின் சார்பில் பிரதமரும், சுகாதாரத்துறை மந்திரியும் தடுப்பூசிகள் ஏற்றுமதி என்கிற லட்சியத்தை பின்னர் வைத்துக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் முழுவதுமாக தடுப்பூசி போடுவதை தற்போது இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

நீட் விவகாரம்

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில், நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என கூறியுள்ளார். அதனால்தான் முதல்-அமைச்சர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கவர்னரிடம் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். தமிழக மாணவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டும், ஓய்வுபெற்ற நீதிபதியின் சட்ட முன்வடிவை படித்துப் பார்க்கும்போதும் நிச்சயமாக இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்