தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் அதற்கான சிறப்பு முகாம்களை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த முகாமில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உதவி எண்கள்
சென்னை மாநகராட்சியின் அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.இத்தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண் வாயிலாக பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமின் இடம், நாள், நேரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.
களஆய்வு
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் இருக்கும் இடத்துக்குச் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றுத்திறனாளிகளும் மேற்குறிப்பிட்ட 2 உதவி எண்களின் வாயிலாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துகொள்ளலாம்.மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு ஒரு மருத்துவ அலுவலர் தலைமையில் ஒரு செவிலியர் கொண்ட மருத்துவக்குழு சென்று பதிவு விவரங்கள் குறித்து களஆய்வு மேற்கொள்வார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கு மிகவும் அருகில் தற்காலிக மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. த.வேலு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.