தமிழக செய்திகள்

சுடுகாட்டில் ஒரு சதுரடியையும் எடுக்க விட மாட்டேன் வைகோ உறுதி

வடசென்னையில் வீடு, வீடாக பிரசாரம் செய்வேன் என்று வைகோ உறுதியுடன் கூறினார்.

மூலக்கொத்தளம் ,

மூலக்கொத்தளம் சுடுகாட்டில் ஒரு சதுரடியையும் எடுக்க விட மாட்டேன். தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்து கூறியதாவது.

1753-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுகாரர்களும் தங்கள் கல்லறைகள் அமைக்க தேர்வு செய்த இடம் மூலக்கொத்தளம். 30 ஏக்கருக்கு மேல் இருக்கும் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 1905, 1910, 1915 ஆகிய ஆண்டுகளில் கல்லறை கட்டப்பட்டது.

1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த தலித் சமூகத்தை சேர்ந்த நடராஜன் உடல் இங்கு தான் எரிக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 15-ந்தேதி தாளமுத்து உயிரிழந்தார். அவருடைய உடலை ராஜா சர் முத்தையா செட்டியாரும், அப்போதைய மேயர் பாசுதேவும் தூக்கிச் சென்று இங்கு எரித்தார்கள். அப்போது அண்ணா, இந்த நெருப்பு இன்றைக்கு அணைந்தாலும், எத்தனை தலைமுறை ஆனாலும் எங்கள் இதயத்தை விட்டு அணையாது என்று சொன்ன இடம் தான் இந்த பகுதி.

இங்கு உடல்களை எரிகிற போது வரும் புகையால் வசதி படைத்தவர்கள் கட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாததால், சுடுகாட்டை அகற்றிட செய்ய திட்டமிட்டு, குடியிருப்புகள் கட்டப் போவதாக அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் குளறுபடி இருந்ததால் மூலக்கொத்தளம் சுடுகாட்டை நான் நேரில் பார்வையிட சென்றேன்.

தற்போது அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும், 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கு வசிக்கும் 150 பேருக்கு வீடுகள் ஒதுக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, எனக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டு இருக்கிறார்கள்.

ஆதி திராவிட மக்கள் என் அன்புக்குரியவர்கள். அவர்களுக்கு வேறு நல்ல இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். சுடுகாட்டில் வீடு கட்டி கொடுக்க கூடாது. எனவே சுடுகாட்டில் ஒரு சதுரடியையும் எடுக்க நான் விட மாட்டேன். நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் முடிந்தவுடன், வடசென்னையில் வீடு, வீடாக சென்று மூலக்கொத்தளம் சுடுகாட்டை பாதுகாக்க பிரசாரம் செய்வேன். இவ்வாறு வைகோ கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு