தமிழக செய்திகள்

சிமெண்டு, தார் சாலை கண்டிராத நகர்கள்

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் தினசரி ஒவ்வொரு வார்டுகளின் குறைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) 32-வது வார்டில் உள்ள குறைகள் குறித்து பார்ப்போம்...

கடலூர் மாநகராட்சி 32-வது வார்டில் சவுடாம்பிகை நகர், தனலட்சுமி நகர், நடேசன் நகர், சித்ரா நகர், தீபிகா கார்டன், வேல்சக்தி நகர், ராஜாத்தி நகர், பிரசாந்தி நகர், கன்னையா நகர், திரிபுரசுந்தரி நகர், ஏ.டி.நகர், அப்பர் நகர், ஏ.டி.கே. நகர், பானுமதி நகர், புத்தர் கார்டன், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நகர், சேர்மன் சி.கே.சுப்பிரமணியன் நகர், ஸ்ரீமோகன் கார்டன் விரிவு, பள்ள தெரு, விநாயகர் கோவில் தெரு, சூரசம்ஹார தெரு, வடுகப்பாளையம், ராமு தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு, வேணுகோபால் நகர், பிரெண்ட்ஸ் அவென்யு, சுப்பிரமணிய சாமி கோவில் தெரு, ஸ்ரீமோகன் கார்டன், செல்வ விநாயகர் நகர், வேலன் நகர், அன்பு நகர், பெருமாள் நகர், ராசி நகர், அம்மன் நகர், பி.எஸ்.எம்.நகர், ஸ்ரீராகவேந்திரா நகர், எஸ்.வி.ஏ. நகர், ராஜாங்கம் நகர், ராம் நகர், நத்தவெளி குண்டு சாலை, ஏ.டி.ஆர். கார்டன், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

மாநகராட்சியில் உள்ள பிற அனைத்து வார்டுகளை காட்டிலும் இந்த வார்டில் தான் அதிக தெருக்கள் உள்ளன. அதேபோல் சாலை, தெருமின்விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. அதாவது, மாநகராட்சியிலேயே அதிக அளவில் மண் சாலை உள்ள பகுதியாகவும் இந்த வார்டு தான் காணப்படுகிறது. குறிப்பாக அன்பு நகர், பெருமாள் நகர், லட்சுமி நகர், வடுகப்பாளையம் காந்திநகர் இணைப்பு, ராசி நகர், ராம் நகர், வேலன் நகர், பிரசாந்தி நகர், ஏ.டி.கே. கார்டன், ஏ.டி.ஆர் நகர், செல்வ விநாயகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை தார் மற்றும் சிமெண்டு சாலை ஏதும் முற்றிலும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் மண் பாதை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்ல முடியாமல் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தெருவிளக்கு இல்லை

இதேபோல் மேற்கண்ட பகுதிகளில் தெருவிளக்கு என்பதும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் 32-வது வார்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் தான் மூழ்கி கிடக்கிறது. மேலும் ஏ.டி.ஆர். கார்டன் உள்ளிட்ட பல இடங்களில் பாதாள சாக்கடை மேன்கோல் வழியாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. சில இடங்களில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையிலேயே கிடக்கிறது. மேலும் பாதாள சாக்கடை மூடி ஆங்காங்கே உடைந்து கிடப்பதால், அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வடிகால் ஆக்கிரமிப்பு

இதுதவிர கடந்த பல ஆண்டுகளாக திரிபுரசுந்தரி நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பதே வினியோகம் செய்யப்படவில்லை. செம்மண் நிறத்தில் தண்ணீர் வருவதால், அதனை பொதுமக்கள் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மேலும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவை மழை ஓய்ந்தும் வடிவதில்லை. காரணம், பல இடங்களில் வடிகால் என்பதே இல்லை. மேலும் ஏற்கனவே ராசிநகர் உள்ளிட்ட பகுதியில் இருந்த வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இதனால் வாய்க்கால் இருந்த இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர் பூங்கா

இதுகுறித்து மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் எம்.செல்வகணபதி கூறுகையில், சவுடாம்பிகை நகரில் சிறுவர்கள் விளையாட மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நடேசன் நகர், சித்ரா நகர் உள்ளிட்ட பகுதியில் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை பூங்கா அமைக்கப்படவில்லை. மேலும் நடேசன் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பூங்கா முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. மாவட்டத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு தான் மரத்தினால் செய்யப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்றி தற்போது அந்த உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனை அப்புறப்படுத்திவிட்டு, நடைபாதையுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும்.

இதேபோல் குப்பைகளை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள், அதனை ஆங்காங்கே கொட்டி தீ வைத்து கொளுத்துகின்றனர். அதனால் குப்பை கொட்டுவதற்கு உடனே, இடம் தேர்வு செய்து, அங்கு மொத்தமாக குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொது கழிவறை

இதுகுறித்து அந்த வார்டு பகுதி மக்கள் கூறுகையில், வண்டிப்பாளையம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். மேலும் வண்டிப்பாளையத்தில் பொது கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும், கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இதனால் தற்போது அந்த கட்டிடம் பாழடைந்து வருகிறது. அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நான்குமுனை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதுடன், அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவர்களின் வசதிக்காக படிப்பகம் அமைத்து கொடுக்க வேண்டும். வரவூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பொதுகழிவறை கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் அந்த பொதுகழிவறையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்