புதுடெல்லி,
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.
இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அதில், நீதிபதி குன்ஹா விதித்த தீர்ப்பினை அவர்கள் உறுதி செய்தனர். இதனால், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை மறுசீராய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.