சென்னை,
கோவை மக்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாவட்ட மக்கள், அருகில் இருக்கும் ஊர் அனைத்தையும் கெடுப்பவர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.
தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறனின் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அதிகார மமதையில் சுற்றித் திரியும் திமுகவினருக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் கோவை மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.