தமிழக செய்திகள்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதால் 5 மாதங்களுக்குப் பிறகு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

காரைக்கால்,

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அனைத்து வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. பிற மாவட்டம், மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் முறை செயல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன.

அதன்படி புதுவை மாநிலத்தில் அரசு பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் சனிக்கிழமையான நேற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வேன், கார், ஆட்டோ மூலம் சனிபகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். ஆனால் அங்குள்ள நளன் குளத்தில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை முதல் மாலை வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இ-பாஸ் முறை ரத்து, கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு சனிபகவான் கோவிலில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது