கரூர்,
கரூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். இதுபோல் தங்களது பதவிகளை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கரூரில் தற்போதே 60 இடங்களில் பட்டி (கொட்டகை) அமைத்து மக்களை அடைத்து வருகின்றனர். இதனை தேசிய ஜனநாயக கூட்டணி கட் சியின் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் பாஜகவுக்கு தொகுதி வழங்கப்படுவது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சிறப்பான ஒருங்கிணைப்பு இல்லை. எங்கள் கூட்டணி திமுகவை விட வலிமையாக உள்ளது.
தவெக தலைவர் விஜய்யுடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதே எங்களின் இறுதி கருத்தாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இதன் காரணமாக திமுக கட்சியானது கடந்த சில நாட்களாக ஒருவிதமான பதற்றத்தில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் தற்போது பாராட்டும் வகையில் உள்ளது. தேர்தல் வரும்போது மட்டும் ராகுல்காந்தி தமிழகத்திற்கு வந்து செல்கிறார். அப்படி வந்து போகிறவர் தலைவர் அல்ல, சுற்றுலா பயணி.
கோவையில் போலீஸ் சூப்பிரண்டு மீதான பாலியல் புகாரில் மிகவும் தாமதமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதுவே திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை எந்த அளவுக்கு கெட்டுப் போயுள்ளது என்பதற்கு உதாரணம். சிபிஐ விசாரணைக்கு செல்வதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஒரு வாரமாக பதற்றத்தில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.