சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் உடனடியாக குதித்துள்ளன. ஆளுங்கட்சியான தி.மு.க. முந்தைய உள்ளாட்சி தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட மகத்தான வெற்றியைப் பெற வியூகம் அமைத்து வருகிறது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இதன் ஒரு கட்டமாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 27-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியாக நடைபெறும்.
இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.