சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன.
நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் பூஜ்ஜியம் அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.
2017-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ததில், 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளனர்.
இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்?. அதன் நுணுக்கங்களை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?. இவர்கள் தட்டுத்தடுமாறி டாக்டர்கள் ஆனாலும்கூட இவர்கள் தரும் மருத்துவம் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? என்ற வினாக்களுக்கு மத்திய அரசு தான் விடையளிக்க வேண்டும்.
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35 சதவீதம் மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம் எதுவும் கிடையாது. இத்தகைய சூழலில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி? என்பதை நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.
ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதைவிட சிறந்த காரணம் தேவையில்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போதுதான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.