சென்னை,
கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க. கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக வசூலித்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"நன்கொடை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி கருப்புப் பணத்தை எல்லாம் வெள்ளைப் பணமாக வசூலித்து வைத்திருப்பது பா.ஜ.க.தான். அவர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்த தொகையே 6 ஆயிரம் கோடிக்கு மேல் என்றால், தேர்தல் பத்திரம் அல்லாமல் கருப்புப் பணமாக எவ்வளவு வசூலித்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலில் அதானி, அம்பானியின் நிறுவனங்கள் ஏன் இடம்பெறவில்லை? தேர்தல் நன்கொடை தரக்கூடிய அளவுக்கு அதானியும், அம்பானியும் பணக்காரர்கள் இல்லையா? அவர்களின் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன. இது பா.ஜ.க.வின் சூதாட்டம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.