சென்னை,
இலங்கையில் இருந்து திருக்கல்யாணமலர் என்பவர் சிறு வயதிலேயே அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். அவர், கடந்த 2008-ம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
பணியில் சேரும்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பாக எந்த விபரங்களும் கேட்கப்படாத நிலையில், 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் இந்தியர் இல்லை என்பதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இது சரியான நடவடிக்கை அல்ல என்றும், பணி நீக்கம் செய்த எஸ்.பி.ஐ. வங்கியின் உத்தரவை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அவர் முறையீடு செய்து உள்ளார்.
இதுதொடர்பான மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, மனுதாரர் பணியில் சேரும்போது இலங்கை அகதி என்பதை மறைக்கவில்லை. 17 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதனை ஏற்க முடியாது. இது அவருடைய குடும்பத்தினரை பாதிக்கும்.
அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சில உரிமைகளை தவிர, வாழ்வுரிமை அடிப்படையில் இந்திய குடிமக்களுக்கு இணையாக அகதிகளாக வந்தோரும் உரிமை கோரலாம் எனக்கூறி பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.