சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை முத்து. இவர் தன்னுடைய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாக வந்த தகவலையடுத்து, கடையம் வனத்துறையினர் கடந்த 22-ந்தேதி இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விவசாயியை அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரியை தீர விசாரித்து உண்மைநிலையை அறிய வேண்டும். இனி வரும் காலங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லும் போது குடும்பத்தில் ஒருவரையும் உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது ஏற்படும் சந்தேக மரணங்களை தவிர்க்க தனி அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் விரைவான விசாரணை நடத்தி, சந்தேகத்தை போக்க தமிழக அரசு தீர்வு காணவேண்டும். விவசாயி அணைக்கரை முத்துவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.