சென்னை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி கூறி உள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். நேற்று அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தந்தை, மகன் உயிரிழப்பு - முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? எனதிமுக எம்பி கனி மொழி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இதில்சம்பந்தப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவுசெய்து 4 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு உத்தரவிட்டது.
மனித உரிமை ஆணைய டிஜிபி இதுகுறித்து நேரடியாக விசாரித்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்து டிஜிபி, மாவட்ட எஸ்.பி. ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு, போலீசார் அடித்து கொன்றதாக ஊர்மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்
உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடைபெறுகிறது.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வருகை மருத்துவ கல்லூரி முதல்வருடன், மாஜிஸ்திரேட் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தெடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கெள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரியபிரகாசம் இந்த முறையீட்டைச் செய்தார்.
மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவரது முறையீட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.
பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கெள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.