கோவை,
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கட்சி ஒப்புதல் இல்லாமல் பேட்டியளித்த வேணுகோபால் எம்.பி.யை கட்சியை விட்டு நீக்கவில்லை. ஆனால் என்னை நீக்கியுள்ளனர். பா.ஜனதாவுக்கு எதிராக பேசினால் அ.தி. மு.க.வை விட்டு நீக்குவது ஏன் என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதாவுக்கு எதிராக அ.தி. மு.க. வாக்களிக்க வேண்டும்.
அ.தி.மு.க. சட்டவிதி திருத்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் சட்ட விதிகள் பரிசீலனையில் இருப்பதாகவும், அ.தி.மு.க சட்டவிதி திருத்தங்கள் இதுவரை ஏற்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமை என்பது சரியாக இருக்காது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே வரவு செலவு சரியாக பார்த்துக்கொள்கிறார்கள். இருவரின் சுயநலத்திற்காக கட்சியினரை பலிகொடுக்கக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்ய வேண்டும். இருவரும் கட்சி பொறுப்பில் இருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.
என்னை அவர்கள் கட்சியை விட்டு நீக்கினாலும், நான் வேறு அணிக்கோ, வேறு கட்சிக்கோ செல்லப் போவதில்லை. வருகிற 31-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் அரசியலில் ஈடுபடாமல் நான் முழுமையாக ஒதுங்கி விடுகிறேன்.
எனக்கு வந்த தகவலின்படி, பா.ஜனதாவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மிரட்டப்பட்டதாக தெரிகிறது. டெல்லி உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து என்னை நீக்கி உள்ளனர். அ.தி.மு.க, பா.ஜனதாவின் கைப்பாவையாகி விட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. தன்னுடைய நிலைப்பாட்டை ஏன் அறிவிக்கவில்லை? காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததைபோல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடியுமா?
எச்.ராஜா, சுப்பிரமணியசாமி போன்றோர் கட்சியையும், அ.தி.மு.க.வினரையும் இழிவாக பேசுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களை தக்கவைக்க முயற்சிக்கின்றனர். மூத்த தலைவர்களின் உழைப்பு, தியாகத்தால் எடப்பாடி பழனிசாமியை தலைவராக உருவாக்கி இருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம், மோடி சொல்லியதன் பேரில் இணைந்தேன் என்றார். சசிகலா ராஜினாமா கடிதம் கேட்டதால் கொடுத்தேன் என்கிறார். அப்படியானால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்த அறிவு இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.