சென்னை,
நேற்று இரவு முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கன மழையினால் பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை முதலே கன மழை தொடர்வதால், சாலைகளில் மழைநீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.
சென்னை மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டரில், 'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்' என்று அதில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் மாநில பேரிடர் நிதியானது கொரோனா நிவாரண பணிகளுக்கும் பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த புயல் காலங்களுக்காக மத்திய அரசின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும்' என கூறியுள்ளார்.