தஞ்சை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சென்னையில் அதிக அளவாக 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கோயம்பேட்டில் தொற்று உறுதி அதிகரித்து வந்தது. இதனால் கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முடிவானது. இதனால், கடலூர், திருவாரூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை தொடர்ந்து தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.