விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 18-ந் கழிஞ்சூர், காந்திநகர், காட்பாடி, மோட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத்த் தொடர்ந்து 4-வது நாளான நேற்று காட்பாடி பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது.
கழிஞ்சூர், விருதம்பட்டு, காந்திநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சித்தூர் பஸ் நிலையம் அருகே கொண்டுவரப்பட்டது.
கருவிகள் பறிமுதல்
காங்கேயநல்லூரில் இருந்து நான்கு விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன. அப்போது சிலைகளுடன் இசைக்கச்சேரியுடன் வந்தனர். இசைக்கச்சேரி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால் விழா குழுவினரை இசை கச்சேரி நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும் விழா குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு இளைஞர்கள் திரண்டு விட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இசை கச்சேரி கருவிகளை பறிமுதல் செய்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் எச்சரித்து போலீசார் இசை கருவிகளை திரும்ப விழா குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
சிலைகள் கரைப்பு
அதன்பின்னர் சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலத்தை வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தின் இருபுறமும் போலீசார் பாதுகாப்புடன் சென்றனர்.
காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 25 விநாயகர் சிலைகள் பழைய காட்பாடியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.