கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மேல்முதலம்பேடு பகுதியில் கடை நடத்தி வந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மூவரும் கஞ்சா போதையில்தான் இந்த வெறிச்செயலை செய்ததாக கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்புதான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமியை இரு மனித மிருகங்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதைத் தொடர்ந்து விளாத்திக்குளத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த பதற்றம் விலகும் முன்பே இப்போது கும்மிடிப்பூண்டி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இப்போது இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணமாக திகழ்வது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் வணிகமும், தாக்கமும் தான். இவற்றைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.

பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்க திமுக அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை.

மக்களிடமிருந்து விலகி மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் இத்தகையக் கொடூரங்கள் நடப்பது கூட தெரியுமா? எனத் தெரியவில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாத திமுக அரசை வரும் தேர்தலில் விரட்டி அடுக்க மக்கள் தயாராகி விட்டனர். இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படவிருப்பது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also read:டிஜிட்டல் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை