தமிழக செய்திகள்

மளிகை, காய்கறி கடைகளும் திறக்கவில்லை: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மளிகை, காய்கறி கடைகளும் திறக்கப்படவில்லை. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னர், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த 15-ந் தேதி முதல் மளிகை,காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. பாலகங்கள் மற்றும் மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டன.

முழு ஊரடங்கையொட்டி, சென்னையில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அண்ணாசாலை, மெரினா கடற்கரை சாலை, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, வாலாஜா சாலை, டைடல் பார்க் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அடையாறு எஸ்.பி.சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் வருபவர்களை வழிமறித்து விசாரித்தனர்.

பெரும்பாலானோர், அவசரமாக மருந்து வாங்க செல்கிறேன். தடுப்பூசி போடச் செல்கிறேன். இறுதி சடங்கில் கலந்து கொள்ள செல்கிறேன் என்று முக்கியமான காரணங்களை கூறி அவற்றுக்கான ஆவணங்களையும் கைகளில் கொண்டு வந்து போலீசாரிடம் காண்பித்துவிட்டு சாலைகளில் பயணித்தனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவ ஊழியர்களின் வாகனங்களும் சாலைகளில் பயணித்தன.

இவை தவிர, சாலைகளில் அனாவசியமாக சுற்றி திரிந்தவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் தீவிர வாகன சோதனைகளை மேற்கொள்கிறார்களா? என்பதை அந்தந்த சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணிப்பதற்காக பிரதான சாலைகளில் ஆங்காங்கே பிரத்தியேகமாக கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மூலம் போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாரின் வாகன சோதனைகளை கண்காணித்தபடி இருந்தனர்.

அதே போன்று, மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் கண்காணித்தனர். மேலும், போலீசார் வாகனங்களில் ரோந்து சென்று சாலையில் தேவையில்லாமல் கூட்டமாக நின்றவர்களை கலைத்து விட்டனர்.

முழு ஊரடங்கையொட்டி, கடைகள் திறக்கப்படாததால், தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர், எழும்பூர் போன்ற வணிக தலங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. பிரபல ஓட்டல்கள் குறிப்பிடப்பட்ட நேரங்களில் திறக்கப்பட்டு இருந்தன. அவற்றில், சுகி, சுமோட்டோ போன்ற ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உணவு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

மேலும், முழு ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவித்த ஏழை-எளியோர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. முழு ஊரடங்கின் போதும், கொரோனா நிதியுதவி ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.

மொத்தத்தில், தமிழகம் முழுவதும் நேற்று ஊரடங்கு என்ற போதிலும், சென்னையில் உள்ள சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து காணப்பட்டாலும், பல்வேறு காரணங்களை சொல்லி பயணிப்பவர்களையும் பார்க்க முடிந்தது.

எனவே, கொரோனா பெருந்தொற்றின் பேரபாயத்தை உணர்ந்து பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்து மருத்துவ காரணங்களை தவிர்த்து பிற எந்த காரணங்களுக்காகவும் வெளியில் வராமல் இருந்தால் தான் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்வதுடன், பிறருக்கும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி முழு ஊரடங்கு இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பது நிதர்சனம்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு