சென்னை,
சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், வானகரம் பள்ளிக்குப்பம் நும்பல் பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்காக கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இந்த கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரரின் புகார் குறித்து ஆய்வு செய்ய திருவள்ளூர் கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறையாத மூத்த அதிகாரி ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக்குழு கூவம் ஆற்றை ஆக்கிரமித்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளதா? கூவம் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் வகையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா? சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் கூவம் ஆற்றுக்குள் விடப்படுகிறதா? என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.