தமிழக செய்திகள்

அதிமுக கூட்டணியில் தமாகா-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

சென்னை:

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. முன்னதாக 5 தொகுதிகள் கேட்ட தமாகாவுக்கு, அதிமுக 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்ததால் சிறிய இழுபறி நிலவியது. ஆனால் இறுதியில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பாஜக-க்கு 27 தொகுதிகள், பாமக-க்கு 18 தொகுதிகள், அமமுக-க்கு 11 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேட்டியளித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ‘சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடும். தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக வர முடியாத நிலையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவில்லை; சைக்கிள் சின்னத்தில் போட்டியிட இயலாத சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்’, என்று கூறினார்.