தமிழக செய்திகள்

கட்டிட கழிவுகளால் சுகாதார சீர்கேடு; மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னையில் அரும்பாக்கம், திருமங்கலம் பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் நீர்வழித்தடத்தில் கொட்டப்பட்டு வரும் கட்டிட கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

கூவம் ஆற்றங்கரையோரம் கட்டிட கழிவுகள்

சென்னையில் கூவம் ஆற்றங்கரையோரம் வாழும் குடியிருப்புவாசிகள் அங்கிருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின்கீழ் கையாளப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளை கூவம் நதி நீரோட்டம் பாதிக்காத வகையில் குப்பைகள் பிரித்தெடுப்பது உள்ளிட்ட பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்தநிலையில் நகரின் முக்கிய பகுதிகளான அரும்பாக்கம், திருமங்கலம் பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றுப்பகுதி சத்தமே இல்லாமல் குப்பை - கட்டிட கழிவுகளின் மையமாக மாறி வருவது, மாநகராட்சி கண்ணில் எப்படி படாமல் போனது? என்று அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த கட்டிட-சேற்று கழிவுகள் நதியின் நீரோட்ட வழித்தடத்தில் கொட்டப்பட்டு வருவதால் வெள்ள காலங்களை இப்பகுதியினர் எப்படி சமாளிக்க போகிறார்களோ? என்ற அச்சத்துடன் கூடிய கேள்வியும் எழுந்திருக்கிறது.

நீரோட்டம் பாதிப்பு

இதுகுறித்து மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:-

கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படக்கூடிய கட்டிட கழிவுகள் கூவம் ஆற்றங்கரையோரம் கொட்டி செல்கிறார்கள். இது தொடர்கதையாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்னதான் கூவம் நதி சீரமைப்பு, சுற்றுசூழல் மறுசீரமைப்பு என திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் கூவம் நதி இன்னும் மாசுபட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மையாக உள்ளது.கனரக வாகனங்களில் கட்டிட கழிவுகள் அடிக்கடி இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. அதேபோல சேறு, சகதி நிறைந்த கலவையும் அதிகளவில் ஆற்றங்கரையோரம் கொட்டப்படுகிறது. இந்த சேறு கலவை கூவம் நதி நீரோட்டத்தில் கலந்து வருகிறது. இந்த சேறு கலவை நதி நீரோட்டத்தை பாதித்து, திட்டு திட்டாக படிந்திருக்கின்றன. மழைக்காலங்களின் போது வெள்ள நீர் பாய்ந்தோடி செல்வதற்கு நிச்சயம் இது பாதிப்பை ஏற்படுத்தத்தான் போகிறது.

பருவமழை தொடங்கும் முன்பாக...

லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வரும் கட்டிட கழிவுகள் சூழ்ந்திருப்பதால், கோல்டன் ஜார்ஜ் நகர் - நெற்குன்றம் பகுதிகளை இணைக்கும் பாலம் உள்ள பகுதி முன்பைவிட சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்தளவு கட்டிட கழிவுகளே ஆக்கிரமித்திருக்கின்றன.நீர்நிலை மாசுபாட்டை தடுக்க கூவம் ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகள் நடுவதற்காக நிதி திரட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதுபோன்ற கட்டிட கழிவுகள் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த திட்டத்தை எங்கே போய் செயல்படுத்துவது? எனவே பருவமழைக்காலம் தொடங்கும் முன்பாக இந்த கட்டிட கழிவுகளை அகற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

தி.மு.க. அரசு அமைந்ததில் இருந்து மக்கள் நல பணிகளிலும், குறைகள்-புகார்கள் உடனுக்குடன் தீர்ப்பதிலும் அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.அந்தவகையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்கும் வகையிலும், மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கையாள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு