மதுரை,
மதுரை காந்தி மியூசியம் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி கக்கனின் சகோதரர் தொடர்ந்த வழக்கில் 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கக்கனின் சகோதரர் தொடர்ந்த வழக்கு
மதுரை மேலூர் தும்பைப்பட்டியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரருமான வடிவேலு (வயது 80), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் காந்திய கொள்கையை பின்பற்றும் மூத்த குடிமகன். மதுரை காந்தி மியூசியத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளேன். காந்தியடிகளின் கொள்கைகளை பரப்பும் வகையில் 1948-ம் ஆண்டு காந்தி மியூசியம் அமைக்க முடிவு செய்து, நாடு முழுவதும் 7 மியூசியம் அமைக்கப்பட்டது. அதில் தென் இந்தியாவிலேயே மதுரையில் மட்டும்தான் காந்தி மியூசியம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த மியூசியத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக் கான மக்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனுடைய பராமரிப்பிற்காக மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் வெவ்வேறு காலகட்டமாக மொத்தம் ரூ.5 கோடி, தொகுப்பு நிதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகுப்பு நிதியில் கிடைக்கும் வட்டித்தொகை மூலம் காந்தி மியூசிய கட்டிடத்தின் பராமரிப்பு, ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றிற்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு, புதிதாக தொகுப்பு நிதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே வங்கியில் உள்ள வைப்புத்தொகைக்கான வட்டியும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மியூசியத்தின் பராமரிப்பு மற்றும் ஊழியர்களுக்கு போதிய சம்பளம் கொடுக்க முடியவில்லை. காந்திய கொள்கைகளை பரப்பும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மிக குறைந்த ஊதியத்தை பெற்று வருகின்றனர்.
எனவே மத்திய-மாநில அரசுகள் காந்தி மியூசியத்தின் தொகுப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மனு அளித்தேன். இதுவரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
3 மாதத்தில் நடவடிக்கை
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி வாதாடினார். முடிவில், மனுதாரரின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை தொடர்ந்த கக்கனின் சகோதரர் வடிவேலு கடந்த ஆண்டு மே மாதம் மரணம் அடைந்தார். ஆனாலும், இந்த வழக்கு கைவிடப்படாமல் மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று, தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.