சென்னை,
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதிமுறைகளின்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தகுதியற்ற பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 500 தகுதியற்ற பேராசிரியர்கள் இருப்பதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பல் கலைக்கழக துணைவேந்தர் களுக்கு (அண்ணா பல்கலைக் கழகம் தவிர) உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், தமிழகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என அனைத்திலும் பணியாற்றும் பேராசிரியர்கள், தற்காலிக பேராசிரியர்கள், கவுரவ பேராசிரியர்கள் என்று அனைவரின் விவரங்களையும் அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் அவர்கள் பணியாற்றும் காலம், பணியில் சேர்ந்த காலம், கல்வித்தகுதி, தேசிய தகுதி தேர்வு, மாநில தகுதி தேர்வு, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளனரா? ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.