தஞ்சை அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் 300 ஆண்டுகளாக இந்துக்கள் முகரம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். மேலும் தீக்குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முகரம் பண்டிகை
முஸ்லிம்களின் புத்தாண்டான முகரம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இந்த முகரம் பண்டிகையை தஞ்சை அருகே ஒரு கிராமத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்களும் கொண்டாடி வருகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சையை அடுத்து உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். மேலும் முஸ்லிம்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் முகரம் பண்டிகையை இந்துக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இடந்த ஆண்டும் முகரம் பண்டிகை அங்கு கொண்டாடப்பட்டது.
10 நாட்களுக்கு முன்பு....
விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் விரதத்தை தொடங்கி ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், ஊருக்கு பொதுவான இடத்தில் உள்ளங்கை போன்ற உருவத்தை 'அல்லா சாமி', என வைத்து தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு, உள்ளங்கை உருவத்திற்கு மாலை அணிவித்து வீதி உலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழங்கள் வைத்து வழிபட்டனர்.
தீக்குண்டத்தில் இறங்கினர்
பின்னர் நேற்று அதிகாலை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் எடுத்து செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டு சாத்தி வழிபட்டனர். மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அல்லா சாமியை தூக்கி வந்த நபர்கள் முதலில் தீக்குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீக்குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'காசவளநாடு புதூர் கிராமத்தில் குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்தது. அதை அல்லாவின் கையாக கருதி கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது, இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர்.
எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் முகரம் திருவிழாவின்போது பிறந்த வீட்டிற்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். 300 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்' என்றனர்.