தமிழக செய்திகள்

சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும்? - அலுவல் ஆய்வுக்குழு 8-ந் தேதி கூடி முடிவு

தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடும் நிலையில், எத்தனை நாட்கள் அவை நடக்கும் என்பது பற்றி முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு 8-ந் தேதி கூடுகிறது.

சென்னை,

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு வருகிற 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கவர்னர், சட்டசபை கூட்டத்தை வருகிற 14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அங்கு சபாநாயகர், முதல்-அமைச்சர், அரசு தலைமை கொறடா, எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சிகள் ஆகியோருக்கும் அலுவலக வசதிகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.

இந்தநிலையில் சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வருகிற 8-ந்தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது.

இதற்கான அழைப்பு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும்? என்னென்ன அலுவல்கள் அந்த கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்? என்ற விவரங்கள் 8-ந் தேதி தெரியவரும்.

இந்த கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கேள்வி நேரம் இருக்காது என்றும், துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகக்கூடும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்