ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். 40 ஆண்டுகளாக தி.மு.க.வில் பல பொறுப்புகளை வகித்துள்ள அவர், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் துணை முதல்-அமைச்சர் உள்பட பல பதவிகளை வகித்துள்ளார். நல்ல அனுபவமிக்க அரசியல்வாதி.
அவருடைய தலைமையில் தி.மு.க.வுக்கு நல்ல காலம் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும்போது பா.ஜனதா குறித்து பேசி இருக்கிறார். பதவி ஏற்கும்போது ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அவ்வாறு பேசி இருக்கலாம். அந்த கருத்துகள் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியும் என ப.சிதம்பரம் கூறி உள்ளார். ஆனால் எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் கூட பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியாது.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி சொல்லியிருக்க மாட்டார். அப்படி சொல்லியிருந்தாலும் கூட வேறு ஒரு அர்த்தத்திற்காகத்தான் சொல்லி இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.