சென்னை
தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் மறைந்ததைடுத்து கட்சியின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, திமுக செயற்குழு கூட்டம் மற்றும் அவரது பணிகள் குறித்து பேசினார். அப்போது கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் தன் பக்கம் இருந்து தன்னை ஆதரித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.மேலும் என்னுடைய ஆதங்கம் எல்லாம் கட்சி தொடர்பானது, குடும்பம் தொடர்பானது அல்ல என கூறினார்
பின்னர் அவர் கோபாலபுரம் சென்றார் அங்கு மு.க.அழகிரி பேட்டி அளிக்கும் போது கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு, மூன்று நாட்களில் சொல்கிறேன் என கூறினார்.
மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அன்பழகனை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அன்பழகன், எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி... குடும்பத்துக்குள் இருந்து நெருக்கடி வந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி கூறினாராம்.
அன்பழகனின் அறிவுரை காரணமாக இப்போதைக்கு அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்பட மாட்டார் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறியதாவது:-
நான் திமுகவுக்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன. தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியை அழித்து விடுவர். தி.மு.கவை அழைக்க நினைப்பவர்களை மறைந்த தலைவர் கருணாதியின் ஆன்மா அவர்களை தண்டிக்கும். கட்சியின் முக்கிய தலைவர்கள் ரஜினியுடன் தொடர்பில் உள்ளனர். என கூறினார்.