சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதகமான பருவநிலையின் காரணமாக 3,702 ஹெக்டர் பரப்பளவில் ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, ஜெர்பரா, கார்னேஷன் ஆகிய மலர்கள் பயிரிடப்பட்டு 39,383 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் மலர்கள், உள்ளூர் சந்தைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் சந்தைப்படுத்தப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு பெங்களூருவில் உள்ள ஏல மையம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள், விற்பனையாளர்கள், மலர் ஏற்றுமதியாளர்கள் ஆகியோரிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, சர்வதேச மலர்கள் ஏல மையம் ஒன்று ரூ.20 கோடியே 20 லட்சம் செலவில் ஓசூரில் அமைக்கப்படும்.
சர்வதேச அளவில் கொள்முதல் செய்ய ஏதுவாக, மின்னணு வசதியுடன் கூடிய ஏலக்கூடம், சிப்பம் கட்டும் கூடம், அலுவலகக் கட்டிடம், தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், குளிர்பதன அறை போன்ற வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்படும். இம்மையம், மலர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அன்னிய செலாவணியையும் அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் நகராட்சி, 8.36 சதுர கி.மீ. பரப்பளவுடன் 33 வார்டுகளை உள்ளடக்கிய மூன்றாம் நிலை நகராட்சியாக 1-10-1919 அன்று துவக்கப்பட்டது. அதன் நிலை படிப்படியாக உயர்ந்து, 1988-ம் ஆண்டில் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, 33.13 சதுர கி.மீ. பரப்பளவுடன் 42 வார்டுகளை கொண்டு விழுப்புரம் நகராட்சி செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு விழுப்புரம் நகராட்சியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையம் ஒரு முக்கிய சந்திப்பாக விளங்குகிறது.
நூற்றாண்டு கண்டு சரித்திரம் படைத்துள்ள விழுப்புரம் நகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, தெரு விளக்குகள், சாலை வசதி, பாதாள சாக்கடை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், குளங்கள், அங்கன்வாடி மையங்கள், நகராட்சி சேவை மையங்கள் போன்றவைகளை மேம்படுத்திட, அ.தி.மு.க. அரசு ரூ.50 கோடி வழங்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து பழங்குடியின மக்கள் சொந்த வீட்டில் குடியிருப்பதை உறுதிசெய்ய வீடுகள் கட்டித் தருதல், அவர்களின் குடியிருப்புகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருதல், இணைப்பு சாலைகள் மற்றும் பாதைகள் இல்லாத இடங்களில் இணைப்பு சாலை மற்றும் பாதை அமைத்துத் தருதல், தெரு விளக்கு மற்றும் சூரிய மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருதல் ஆகிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும்.
பழங்குடியின மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், பள்ளிக்கு வெகுதூரம் செல்வதை தவிர்க்கவும், அவர்தம் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துதல் அவசியமாகிறது.
நடப்பு கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாச்சேரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசவெளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காப்புரம் ஆகிய 3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் நிலை உயர்த்தப்படும்.
ஆதிதிராவிட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடும் வகையில், மதுரை மாவட்டம் கே.புளியங்குளம், கரூர் மாவட்டம் வாங்கல் குச்சிபாளையம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் 82 கவுண்டம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் ரெங்கசமுத்திரம் ஆகிய 5 கிராமங்களில், அனைத்து வசதிகளுடன் கூடிய 5 சமுதாயக் கூடங்கள், தலா ரூ.1 கோடி வீதம், ரூ.5 கோடி மதிப்பில் கட்டப் படும்.